ஊடகங்களை மிரட்டுவது தமிழிசை தகுதிக்கு ஏற்றதல்ல.! - தேனி திருமலை அறிக்கை

By 
erasai10

'பாஜக தலைவர் தமிழிசை, ஊடகங்களை மிரட்டிய செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் ஊடகங்களை மிரட்டுவது அவருடைய தகுதிக்கு ஏற்றதல்ல. ஊடகங்களை மிரட்டிய செயலுக்கு அவர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனியும் அதைத் தொடர வேண்டாம் என்று அவரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கோ தமிழர்களின் வளர்ச்சிக்கோ எல்லா சமூக ஊடகங்களும் பாடுபடுவதாகச் சொல்ல முடியாது; இங்கே பணம் மட்டுமே எல்லோருடைய வாழ்க்கையையும் உயர்த்தும் இடத்தில் இருக்கிறது; பணமும் முயற்சியும் இருந்தால், இங்கு எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது;

வியாபார நோக்கிலோ வருமானத்தை எதிர்பார்த்தோ நடத்தப்படும் ஊடகங்கள், செய்திகளை பரபரப்பாக வாசகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக சில வார்த்தைகளை காரசாரமாக அமைத்து வெளியிட்டு விடுகிறார்கள்; 

அதே நேரம், மக்களுக்குத் தேவையான நல்ல செய்திகளையும் கடமை உணர்வோடு வெளியிட்டு மற்ற செய்திகளை சமநிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்;

அன்று முதல் இன்று வரை, வளர்ந்து வரும் புகழ்பெற்ற பத்திரிகைகள் கூட, செய்திகளில் இப்படிப்பட்ட யுக்திகளைக் கையாண்டுதான் இப்போது உயர்ந்த இடத்தில் இருந்து கோலோச்சி வருகிறார்கள். 

துணிச்சலாக செய்திகளை வெளியிடும்போது, பெரிய பத்திரிகை சிறிய பத்திரிகை என்று பாகுபாடு பார்க்க முடியாது. நீங்கள் என்னதான் மிரட்டினாலும் அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஊடகங்களை ஆதரிக்கிறவர்கள் விரைவில் பெரிய தலைவர்களாகி விடுகிறார்கள்; எதிர்ப்பவர்கள் ‌தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்றுதான்.

எனவே, தமிழிசை அவர்களுக்கு மட்டுமல்ல, அவரைப் போன்று பத்திரிக்கை தர்மம், பத்திரிகை சுதந்திரம் இவைகளைப் பற்றிப் பற்றி புரிந்துகொள்ள முடியாத அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள் மேற்கண்ட எனது  கருத்துகளைப் புரிந்துகொண்டு ஊடகங்கள் குறித்து. இனி விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதே நேரம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கொள்கைக்கு முரணாக திமுக அரசு, ஊடக ஆசிரியர்களைக் கைது செய்து மிரட்டுவதும், சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் தேவையற்றது. ஊடகங்கள் மீது அரசு நடத்தும் பழி வாங்கும் போக்கு இனியும் தொடரக் கூடாது. 

எனவே, முன்னதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் ஊடக ஆசிரியர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை குறிப்பிட்டுள்ளார்.

Share this story