நீட் தீர்வுக்காக சென்னை மெரினாவில் மீண்டும் ஒரு போர்க்களமா?- தமிழர்கள் நெஞ்சில் எரியும் நெருப்பு.!

By 
erasai

தமிழகத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினாவில்  நடைபெற்ற எழுச்சிமிகு ‌ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக, ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்று உலக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டது. 

அதேபோல், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் ஒரு போராட்டம் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், அதற்கும் தமிழக மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான கவிஞர் அ.திருமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்; அதன் விபரம் வருமாறு:

தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது, மாணவ, மாணவிகளின் வருங்காலக் கனவுகளை தூள் தூளாக்கும் வெடிகுண்டாகவே பார்க்கப்படுகிறது. ஏழை,எளிய நடுத்தர மக்கள் தங்கள் நீண்ட நாள் ஆசைகளை குழி தோண்டிப் புதைக்கும் ஆயுதமாகவே நீட் தேர்வைப் பார்த்து மக்கள் அஞ்சுகிறார்கள். 
 
அரசுப் பள்ளிகளுக்கு  தங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைப்பதே முடியாத காரியமாக இருக்கும்போது, +2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டர்களில் பணம் கட்டி படிக்க வைக்க ஏழை, எளிய நடுத்தர மக்களால் எப்படி முடியும்?

நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மற்ற மாநிலங்களுக்கும் விதி விலக்கு அளிப்பதால், மத்திய அரசுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடப்போகிறது? 

தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்தி நீட் விதிவிலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்து; அதை கவர்னர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்; பிறகு சில மாதங்கள் கழித்து அதே தீர்மானம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இரண்டாம் முறையாக தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது;

ஆனால் அதை அவர் தமிழக அரசுக்கு  திருப்பி அனுப்பவில்லை; ஆனால் காத்திருப்பில் வைத்து விட்டார். இதைக்கூட சரியாகச் செய்ய முடியாத கவர்னர், பதவி விலகி விடாமல் காலம் தாழ்த்துவது ஏன்? இதுதான் ஜனநாயகமா? அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே கவர்னராக நியமித்தால்  இப்படிப்பட்ட சூழல் உருவாகுமா? இதுதான் ஜனநாயக அரசியலா? இதனால் மத்திய அரசில் பெரிய கொள்கை முடிவுகள் என்ன ஏற்பட்டு விடப் போகிறது? 

முதலில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து மாநில சுயாட்சி என்பதற்கான அடையாளத்தை உருவாக்குங்கள்; அப்போதுதான் இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும். அதுவரை இந்தியா ஒரு சர்வாதிகார நாடா? அல்லது ஜனநாயக நாடா? என்ற கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கும்.

இது நடக்குமா? நடக்காதா? என்று சிந்திப்பதைவிட நடத்திக் காட்டுவோம் என்ற மன உறுதியோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தன் விடாமுயற்சியை கைவிடவில்லை.  கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை கவர்னர் மாளிகையில் சந்தித்தார்;  நீட் தேர்வு  விதிவிலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கும்படி கவர்னரிடம் கேட்டுக் கொண்டார்;  சம்மதம் தெரிவித்த கவர்னர் தமிழக முதல்வரிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால், மசோதாவில் பரிந்துரை எதுவும் செய்யாமல், அதை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர். ஆனால் ஜனாதிபதி மாளிகையிலும் மசோதாவுக்கு காத்திருப்பு பட்டியலிலேயே இடம் கிடைத்தது; 

கடந்த வெள்ளிக்கிழமை (27-10-2023) சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கினார். அதைத் தொடர்ந்து நீட் விதிவிலக்கு மசோதாவை நிறைவேற்றித் தருமாறு மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் தமிழக முதல்வர் வழங்கினார்; ஆனால், மவுனத்தை மட்டுமே முதல்வருக்கு பதிலாகத் தந்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டார் ஜனாதிபதி. 
 
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விதிவிலக்கு மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது; ஜனாதிபதி 'திரௌபதி முர்மு' அவர்கள் இனியும் யாருக்காக காத்திருக்க வேண்டும்? மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிக்க வேண்டியதுதானே? மாநில மக்களின் உரிமைகளைக் காப்பதில் முதல் பங்கு ஜனாதிபதிக்குத்தானே? இதில் என்ன சந்தேகம்? தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த தயக்கம் ஏன்? யாருக்குப் பயப்பட வேண்டும்? 

ஒரு மாநிலத்தின் சராசரி உரிமையைக் கூட அவரால் கொடுக்க முடியாவிட்டால், ஒட்டு மொத்த இந்திய மக்களின் உரிமைகளை அவரால் எப்படி பாதுகாக்க முடியும்? 'பெண் ஜனாதிபதி' என்றால், துணிவும் அதிகாரமும் அவர்களுக்கு இருக்கக் கூடாதா? யாருக்கும் வளைந்து கொடுக்காமல் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாதா? அப்படிப்பட்ட நெருக்கடி ஜனாதிபதிக்கு இருக்குமானால், பதவிச் சுகத்தைவிட சுயமரியாதையே பெரிதென்று நினைத்து தன்னுடைய பதவிக்கு ஒரு 'குட்பை' சொல்லி விடலாமே?

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினாவில்  நடைபெற்ற எழுச்சிமிகு ‌ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக, ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்று உலக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டது. 

அதேபோல், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் ஒரு போராட்டம் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், அதற்கும் தமிழக மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்' என சமூக ஆர்வலரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான கவிஞர் அ.திருமலை   தெரிவித்துள்ளார். 

Share this story