ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறதா?: அமைச்சர் சேகர் பாபு விளக்கம்..

By 
babu5

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கனமழை பெய்தது. குறிப்பாக தலைநகரை மொத்தமாக புரட்டி போட்டது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்தது. கிட்டத்தட்ட 2, 3 நாட்களுக்கு சென்னை முழுவதுமாக முடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு மின் தடை, இணைய சேவை பாதிப்பு என கடுமையான சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்.. தமிழக அரசு விளக்கம் சென்னையின் பிராதன சாலைகளில் கூட முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. மழை விட்டு இயல்பு நிலை திரும்பவே சில நாட்கள் பிடித்தது. மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. இரு சக்கர வாகனங்கள், கார்கள் கூட வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

மழை விட்ட பிறகு முழு வீச்சில் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது. இது ஒருபக்கம் இருக்க சென்னை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். வெள்ள நிவாரணம் ரொக்கமாக ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகை பெற டோக்கன் விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 17 ஆம் தேதி முதல் வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

வரலாறு காணாத.. 47 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும், நிர்வாகிகளையையும், களத்தில் நின்று அரசு அதிகாரிகளின் துணையோடு மீட்பு பணியில் ஈடுபட்டதால் 2 நாட்களிலேயே 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதை அனைவரும் அறிவீர்கள்.

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழு தமிழக அரசை பாராட்டியுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தின் நடவடிக்கையை போல் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை உணர்ந்து மத்திய குழு பாராட்டியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் கூட மக்களுக்கு ரூ.6000 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வரை மக்கள் மனதார மகிழ்ச்சியோடு மக்கள் பாராட்டும் நிலை நிலவுகிறது.

பெய்த மழையின் போது வசைபாடியவர்கள் கூட இன்றைக்கு முதல்வரை வாழ்த்துகின்ற நல்லதொரு சூழல் நிலவுகின்றது. சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நிவாரண தொகைக்காக மக்களை அலைய வைக்காமல் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்து உள்ளோம்.

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அறிவித்து இருக்கிறார். அதன்படியே குடும்ப அட்டதாரர்களுக்கும் ரூ.6000 வழங்குவோம். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிப்போம் என்றும் சொல்லியிருக்கிறார். எனவே பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வெள்ள நிவாரணத்தொகை ரூ.6000 வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் கருணை உள்ளத்தோடு முடிவு எடுப்பார்கள்.

குடும்ப அட்டை உள்ளவர்களுக்கும்.. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே ரூபாய் 6000 வழங்குவதாக தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருந்தார். ஆகவே முழுமையாக அனைவருக்கும் சென்றடையும் படிதான் முதல்வர்  ஸ்டாலினின் நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

 

Share this story