ரேஷன் கடைகளால் காற்றில் பறக்கிறதா சுயமரியாதை?: ஓர் ஆய்வு 

By 
ration3

'ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள கைரேகை முறை, புதிதாக வரப் போகும் விழித்திரை ஸ்கேன் ஆகிய திட்டங்களை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்' என எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான கவிஞர் அ.திருமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

'தமிழ் நாட்டில் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன; அந்த ரேஷன் கடைகளில், தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை ஸ்கேனர் முறையை நீக்கி விட்டு, விழித்திரை (கண்) ஸ்கேனர் முறையைக் கொண்டு வரப் போவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இந்தத் திட்டங்களால், அரசுக்கோ மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.
              
ஆனால், பயன்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிச்சயம் கிடைத்துவிடும். அதனால்தான் சம்பந்தப்பட்ட  அமைச்சர் மற்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஸ்கேனர் முறையை மாற்றி மாற்றி கொண்டு வர திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்கள்.
              
ரேஷன் கடைகளில் எடை குறைவாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. எடை குறைவாக வழங்கப்படுவது ரேஷன் கடை ஊழியர்களின் தவறல்ல; அதிகாரிகள் செய்யச் சொல்வதை ஊழியர்கள் செய்கிறார்கள். 

அரசுக்கு இதுவரை பேக்கேஜ் (தைக்கப்பட்ட பைகளில்) முறை திட்டத்தை ஏன் அதிகாரிகள் வகுத்துக் கொடுக்கவில்லை? அதனால் அவர்களுக்கு வருமானம் போய்விடுமே?

விழித்திரை ஸ்கேனர் முறைக்கு செலவிடப்படும் தொகையை, வரும் 20 ஆண்டுகளுக்கு பேக்கேஜ் முறைக்கு பயன்படுத்த முடியும். இதில் மீதமிருக்கும் தொகையை ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரம் அவர்கள் குழந்தைகளின் வருங்கால கல்விக்கு உதவும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஸ்கேனர் முறையை கொண்டு வந்து மக்களை குற்றவாளிகளாக்க அதிகாரிகள் முயற்சிப்பது ஏன்? குற்றத்தை அதிகாரிகள் செய்துவிட்டு, பழியை மக்கள் மீதும் ஊழியர்கள் மீதும் போடுவது அரசையே ஏமாற்ற நினைப்பது ஆகாதா?

ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள கைரேகை முறை, புதிதாக வரப் போகும் விழித்திரை ஸ்கேன் ஆகிய திட்டங்களை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக எடை குறைவதைத் தடுக்கும் வகையில்'பேக்கேஜ்' முறையையும் கூடிய விரைவில் தமிழக அரசு அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்த திட்டங்களை கொண்டு வரும்போது அவரை மட்டுமல்ல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் தமிழக மக்கள் பாராட்டு மழையால் நனைத்து விடுவார்கள்; முக்கியமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை' என தெரிவித்துள்ளார்.

Share this story