கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரமா?: பாஜக-திமுகவுக்கு பகிரங்க கேள்வி..

By 
t1

'பா‌ஜகவும் திமுகவும் இனியாவது விழித்துக் கொள்ளுமா?' என கவிஞரும் அரசியல் விமர்சகருமான அ.திருமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : 

பாஜக ஆட்சி இந்திய மக்களுக்கு சேவை செய்யாமல் இந்து மக்களுக்கான சேவைகளை ஆர்எஸ்எஸ் ஆலோசனைப்படி கனகச்சிதமாக செய்து வருகிறது; ஒரு வகையில் அது சரி என்றாலும் தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், மவுனத்தையே மத்திய அரசு பதிலாகக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

நீட் தேர்வுக்கு தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க மறுப்பது ஏன்? கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளிக்கூட மாணவி  ஶ்ரீமதி மர்ம மரணம் குறித்து மறு விசாரணை நடத்த மத்திய உள்துறை ஏன் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை?

தமிழக அரசும் சிபிஐ விசாரணையை ஏன் இதுவரை கோரவில்லை? இது போன்ற கேள்விகள் மட்டுமே தமிழக மக்களின் இதயங்களை தினந்தோறும் வருடிக் கொண்டே இருக்கிறது.

மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரத்தையும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காமல் இருப்பது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும்; மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு நீட் தேர்வு விதிவிலக்கு, மாணவி ஶ்ரீமதி மரணத்துக்கு சிபிஐ விசாரணை ஆகியவற்றுக்கு விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும்;

தவறினால் , தமிழக மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் படுதோல்விக்கு தள்ளி விடுவார்கள் என்பது உறுதி; பா‌ஜகவும் திமுகவும் இனியாவது விழித்துக் கொள்ளுமா? அல்லது 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்ய முயற்சிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்' என குறிப்பிட்டுள்ளார்.

Share this story