மாநாடு பெரிதா? மானம் பெரிதா? : மருது அழகுராஜ் தெளிவுரை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
* மக்கள் திலகத்தின் விதிகளை திருத்தி.. மகராசி அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்கி.. அவர் அடையாளம் காட்டிய தங்கமகன் ஓ.பி.எஸ்ஸை அவமானப்படுத்தி..
அம்மா வாழ்ந்த கொடநாடுல கொலை கொள்ளை நடத்திய எடப்பாடியின் கொள்ளைக்கூட்டம் நடத்துகிற மாநாட்டுக்கு உப்பு உரைப்பு போட்டு சாப்பிடுகிற மானமுள்ள கழகத்தொண்டன் போகவே மாட்டான்.
தலைக்கு 1000 என விலைவைத்து எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி தடுக்கு விரித்து அழைத்தாலும் தன்மானம் பெரிதெனும் தாயின் தொண்டன் தலை வைத்தும் படுக்கமாட்டான்.
* ஒரு முன்னாள் காவல் அதிகாரியான அண்ணாமலைக்கு கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தின் பின்னால் இருக்கும் சதிகாரன் யார் என்பது புலப்படவில்லையா..
தெளிவாக தெரிந்தும், அண்ணா திமுக வுக்கு ஒரு தவறான தலைமையை உருவாக்க துணைபோகிறோமே என்கிற குற்றவுணர்வு கண்ணியம் போதிக்கும் காக்கிச்சட்டை மூலம் முன்னுக்கு வந்த அவருக்கு இல்லாமல் போனதற்கு எது காரணம்?
* தொண்டர்கள் உரிமையை பறிக்கும் எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை, கழகத்திற்கு இவ்வுலகம் தந்த பரதன் என அம்மா காட்டிய அடையாளத்தை, இப்படி ஒரு விசுவாசமிக்க தொண்டனை பெற்றதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என அம்மா புகழாரம் சூட்டிய பெரியகுளத்து பெரிய மனத்தாரை உதிர்ந்த மயிரு என்கிறார்.. உளறுவாயர் செல்லூர்காரர்.
அரசன் அதிகாரம் ஏற்பதை உலகாளும் தமிழ் முடி தரித்தல் என்கிறது..
கொத்துக்கொத்தாக கொட்டும் முடி புற்றுநோயின் அறிகுறி என்கிறது அறிவியல்..
முடியப்போகும் வாழ்வை முதலில் உணர்த்துவது உதிரும் தலைமுடியே என்கிறது உலகச் சித்தாந்தம்..
இதெல்லாம் ஆவியாகும் தண்ணீரை தர்மகோல் போட்டு தடுக்கப்பார்த்த தமிழகத்து தாமஸ் ஆல்வா எடிசனுக்கு தெரியுமோ..
அழிவின் போக்கு ஆணவம் கொண்ட நாக்கில் தான் தொடங்கும் என்பதை உமக்கும் உம் மூடர் கூட்டத்துக்கும் விரைவில் காலம் உணர்த்தும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.