விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பு உண்டா.? - தேர்தல் ஆணையம் தகவல்..

By 
vnr

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்டார் தொகுதியாக விருதுநகர் தொகுதி பார்க்கப்பட்டது. இந்த தொகுதியில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சி சார்பாகவும், நடிகை ராதிகா சரத்குமார் பாஜக சார்பாகவும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது விஜயபிரபாகரன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பு, பரபரப்பு கடைசி நிமிடம் வரை நீடித்தது. இறுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே வாக்கு எண்ணிக்கை முடிந்த மறு நாள் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. 

தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது. தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

Share this story