உலகிற்கு உணர்த்தியது ஈபிஎஸ் தரப்பு ஜீனும் இதே ஜூனும் : மருது அழகுராஜ் சுவடுகள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
கடந்த வருடம்.. இதே ஜூன் மாதம் 23-ம் தேதி செயற்குழு பொதுக்குழுவுக்கான 23 தீர்மானங்களையும் தலைமைக்கழகத்தில் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து எழுதி இறுதி செய்து, சங்கர் தட்டச்சு செய்து முடிக்க,
அன்றைய ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரது ஒப்புதல் பெற்று, தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் ஒப்படைத்து விட்டு, அவர் வாங்கித் தந்த தேனீரை குடித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்த போது இரவு 11 மணி.
ஆனால், அந்த ஒட்டுமொத்த 23 தீர்மானங்களும் "ரத்து செய்யப்படுகிறது.. ரத்து செய்யப்படுகிறது.. ரத்து செய்யப்படுகிறது" என ஏலக்கடையில் அறிவிப்புச் செய்வதுபோல் பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம் கூவியபோது.. ஒரு கணம் அதிர்ந்து போனேன். காரணம்..
அந்த 23 தீர்மானங்களில் ஒன்று.. தன் ஆயுளில் முப்பத்து மூன்று வருடங்களை அண்ணா திமுக என்கிற ஒப்பற்ற இயக்கத்தை உச்சத்தில் அமர்த்திட தன்னலம் துறந்து, தன் உடல்நலம் பேணவும் மறந்து உழைத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி பாராட்டும் தீர்மானமும் ஒன்று என்பதால் தான்.. அதுமட்டுமா.. அடுத்த சில நாட்களில் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே அம்மாவை நீக்கினார்கள்.
ஆம்..நாற்காலிப்பித்துப் பிடித்தவர்களின் ஜீனிலேயே நன்றி உணர்ச்சி என்பதெல்லாம் அணுவளவும் இருப்பதில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியது இதே.. ஜூன் 23-ம் நாள் தானே.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.