எல்லாம் ஓட்டாக மாறிவிடும் என்று நினைப்பது அறியாமை: நடிகர் விஜய் மீது தெறிக்கும் விமர்சனம்..

'இன்றைய காலக்கட்டத்தில், மிக சாதுரியமான அரசியலை மிகவும் நன்கு புரிந்துகொண்ட வல்லமையான தலைவர்கள் தான் தமிழகத்திற்கு தேவை. அந்த நிலையில், விஜய் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை' என அரசியல் விமர்சகரும் கவிஞருமான கே.எஸ்.கோனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது கருத்துரை வருமாறு:
'லியோ' திரைப்பட வெற்றி விழாவில், விஜய்யின் "2026-ல் கப்பு முக்கியம் பிகில்" என்ற வார்த்தை ஜாலம் என்ன சொல்கிறது?
உண்மையிலேயே இந்த திரைப்படம் வெற்றியை அடைந்ததா என்பது ஒரு பக்கம். ஆனால், இந்த வெற்றி விழாவின் நோக்கம் என்ன? எதை நோக்கி செல்கிறார் விஜய்?
ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், சினிமா ஒன்று மட்டுமே அரசியலில் நுழைவதற்கு போதும் என இவர்கள் நினைப்பது என்பது, 'நினைப்புதான் பொழைப்பை கெடுத்துச்சாம்' என்னும் பழமொழிக்கு ஏற்ப, சினிமாக்காரர்களின் இந்த அரசியல் பிரவேசம்.
விஜய் மட்டுமல்ல, இதற்கு முன்னர் வந்தவர்களின் தற்போதைய நிலை என்ன?
ஒரு கடையை ஆடம்பரமாக திறக்கும்போது வரும் கூட்டம் எத்தனை நாள் என்பதுபோல.. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் மிச்சம்.
கமல்ஹாசனின் தற்போதைய நிலை, என்னை பொறுத்தவரையில் ஒரு எம்பி சீட் வாங்கி திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நிற்பதோடு இவர் கதை முடிந்துவிடும்.
மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல, அரசியலை மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு புதிய ஆள் அரசியலில் நுழையும் போது, மிக உன்னிப்பாக பார்க்கிறார்கள். அதை ஒரு கூட்டம் ஆஹா..ஓஹோ என்று பேசி சில நாட்களிலேயே இன்னொருவரை புகழ்ந்து பேசி போய்க் கொண்டே இருக்கிறது. இந்த கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி போனதுதான் இவர்கள் கண்டது.
அந்த இடத்தில் வந்து நின்று விட்டார் விஜய்யும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
முதலில், ஒன்றை மட்டும் இவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் நினைப்பது எம்ஜிஆர் அவர்களையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் தான். அவர்களைப் போலவே நாமும் வந்துவிடலாம் என்ற நப்பாசையில் மக்களை குழப்புவதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.
ஆனால், எம்ஜிஆர் அவர்கள் சினிமாவோடு அரசியலிலும் பயணம் செய்தார் என்பதை இவர்கள் ஒரு பக்கம் ஏன் பார்க்க தவறி விட்டார்கள்.
எம்ஜிஆர் அவர்கள் பெரியார், அண்ணா என்று அரசியலோடு சுற்றிச் சுழன்றவர்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எம்ஜிஆர் அவர்கள் எவ்வளவு பெரிய சக்தியாக அமைந்தார் என்பது இவர்களுக்கு தெரியாதா. அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் முதலமைச்சராக ஆனதற்கு எம்ஜிஆர் தான் காரணம் என்பது இவர்களுக்கு தெரியுமா? முதல் அமைச்சரவைப் பட்டியலை அண்ணா அவர்கள் எம்ஜிஆர் அவர்களுக்கு அனுப்பி.. இதில் எம்ஜிஆருக்கு திருப்தியா? என்று அண்ணா கேட்டது இவர்களுக்குதெரியுமா?
திமுகவின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து களப்பணி ஆற்றியவர் எம்ஜிஆர். பிறருக்காக தன் சம்பாத்தியத்தை அள்ளி தானமாக கொடுத்தவர் எம்ஜிஆர்.
அன்றைய காலக்கட்டத்தில், இந்தியா-சீனா போருக்காக ஒன்றரை லட்சம் கொடுத்தவர் எம்ஜிஆர். இன்று இது பல நூறு கோடிகளுக்கு சமம். இப்படியெல்லாம் சமூகத்திற்காக பாடுபட்டு முதலமைச்சர் ஆனவர் எம்ஜிஆர் அவர்கள்.
அதைப்போல, அம்மா ஜெயலலிதா அவர்கள் அதிமுகவின் அடுத்த வாரிசாக தன்னை எம்ஜிஆர் அவர்கள் இருக்கும்போதே நிலை நிறுத்திக் கொண்டவர். அரசியலில் அவர் ஒரு சுயம்பு. அவர் ஒன்றும் பெரிதாக ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. காலம் அவரை வரவேற்றுத் தழுவிக் கொண்டது. அவருடைய அபார புத்திக்கூர்மை அவரை அரசியலில் ஒரு ஜாம்பவான் ஆக்கியது.
இதையெல்லாம், விஜய் அவர்கள் உற்று நோக்க வேண்டும் தன்னைச் சுற்றி இருக்கிற ஒரு ரசிகர் கூட்டத்தை நம்பி, அரசியலில் இறங்க நினைப்பது முட்டாள்தனம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அது எல்லாம் ஓட்டாக மாறிவிடும் என்று நினைப்பது அறியாமை. ஒரு கட்டத்தில் வந்து உசுப்பேத்தி விட்டு, பிறகு அது கலைந்து விடும் என்பதுதான் உண்மை.
ஏன்.. விஜயகாந்தை எடுத்துக் கொள்ளுங்கள் 15 சதவீதம்வரை வந்த வாக்குவங்கி.. ஒரு சதவீதம் ஆகிவிட்டது.
இதுதான் கசப்பான உண்மை. ஏன்.. விஜயகாந்த் நல்லவர், இரக்க குணம் உடையவர் இல்லையா.!
இதெல்லாம் அரசியலுக்கு போதாது. அரசியலுக்கு என்ற ஒரு புரிதல் வேண்டும். மிகச்சிறந்த புத்திக்கூர்மை வேண்டும். எந்த ஒன்றையும் சினிமாவில் காட்டுவது போல், டாம் டூம் என்று செய்திட முடியாது.
இன்றைய காலக்கட்டத்தில் ,மிக சாதுரியமான அரசியலை நன்கு புரிந்துகொண்ட வல்லமையான தலைவர்கள் தான் தமிழகத்திற்கு தேவை. அந்த நிலையில், விஜய் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என்பதை அவர் புரிந்துகொள்வது அவருக்கும் அவரின் சினிமாவிற்கும் நல்லது என்பதே என் கருத்து.
இவ்வாறு அரசியல் விமர்சகரும் கவிஞருமான கே.எஸ்.கோனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.