24 மணி நேரம் தான் கெடு.. மன்னிப்பு கேட்கனும் - ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் நோட்டீஸ்..

By 
pmk4

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய  வியாபாரிகளோடு திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சங்கராபுரம் உதயசூரியனுக்கும்,  ஸ்ரீவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் தொடர்பு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் கண்காணிப்பாளரும் எம்எல்ஏவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும்,  எம்எல்ஏக்களை காலையில் சந்தித்த பிறகு தான் தங்களது அன்றாட பணிகளை தொடங்குவதாகும், அப்படி இல்லாத பட்சத்தில் பணி மாறுதல் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். 

இந்த நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாக் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக வழக்கறிஞர் வில்சன் அனுப்பி உள்ள வக்கீல் நோட்டிஸில், கள்ளச்சராயம் மரணத்தை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளனர்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையும் அமைக்கப்பட்டுள்ளது. விஷச்சாராய அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இருந்து அடுத்தடுத்த நிமிடங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் நேரத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் எத்தனை வருடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றினார்கள். எப்போது பணி உயர்வு பெற்று சென்றார்கள் என்பது தொடர்பான விளக்கமும் அதில் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமின்றி சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தொகுதி உள்ள டாஸ்மாக் கடைகள் எத்தனை மூடப்பட்டது தொடர்பான பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளது

எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவை தொடர்பு படுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் . மேலும் அவர்கள், தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி செலுத்த வேண்டும், 24 மணி நேரத்தில் இதை செய்யாவிடில், வழக்கு தொடுக்கப்படும் என அந்த வழக்கறிஞர் நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story