தண்டனையல்ல, நீதிதான் முக்கியம் : அமித்ஷா

By 
amit11

இந்தியாவை 1858லிருந்து 1947 வரை பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். 1860ம் வருடம் குற்றங்களுக்கான தண்டனை சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தை கொண்டு வந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்து குடியரசான பிறகும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களே நாட்டில் நடைமுறையில் உள்ளது.

பல தசாப்தங்களை கடந்தும் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த சட்டங்களில் தற்போதைய மற்றும் எதிர்கால இந்தியாவின் தேவைகளையும், நலன்களையும், நாடு சந்திக்கும் சவால்கலையும் கருத்தில் கொண்டு இதில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்த மத்திய அரசாங்கம் இதற்கான பரிந்துரைகளை செய்ய மார்ச் 2020ல் கிரிமினல் சட்ட சீர்திருத்த குழு ஒன்றை உருவாக்கியது.

பல சட்ட வல்லுனர்களை கொண்ட இக்குழுவிற்கு தலைவராக புது டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேரா. டாக்டர் ரன்பிர் சிங் நியமிக்கப்பட்டார். இக்குழுவின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படி புதிய சட்டங்களை உருவாக்க, முதல் கட்டமாக 3 மசோதாக்களை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் உள்துறை மந்திரி அமித் ஷா.

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். இவை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு பரிந்துரைகளுக்காக அனுப்பப்படும். இது குறித்து பேசிய அமித் ஷா கூறியிருப்பதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியினால் விளைந்த அடிமைத்தன மனோபாவத்தை இந்தியாவில் ஒழிக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். பிரிட்டிஷ் நிர்வாகத்தை வலிமைப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள இ.பி.கோ. சட்டங்கள், தண்டனை வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டவையே தவிர, நீதி வழங்குவதை அல்ல. புதிய 3 சட்டங்களின் மூலம் இவற்றை மாற்றுவதனால் இந்திய குடிமக்களின் உரிமைகளை காக்கும் நோக்கம் சிறப்பாக நிறைவேற்றப்படும்.

குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மட்டுமே இனி தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 511 செக்ஷன்களை கொண்ட இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படும் புதிய சட்டத்தில் இனி 356 செக்ஷன்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story