கர்நாடக சட்டசபை தேர்தல் : 'அனல் பறக்கும் பிரசாரம்' இன்றே கடைசி..

By 
kar66

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் நேற்று கர்நாடகத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள். பிரதமர் மோடி பெங்களூருவில் 6½ கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த காரில் சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அதன்பிறகு, சிவமொக்கா, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரதமர் பேசி இருந்தார். பிரதமர் மோடி கர்நாடகத்தில் 7 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பெலகாவி, சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா, ஆனேக்கல்லிலும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு பசவனகுடி தொகுதியிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மைசூருவிலும் நேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தாவணகெரே மற்றும் பல்லாரி மாவட்டத்தில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பெங்களூருவில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் பங்கேற்று இருந்தார். பா.ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகரிலும், மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெங்களூரு காந்திநகர் மற்றும் மங்களூருவிலும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொப்பல் மாவட்டத்திலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார்கள்.

பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களும் நேற்று தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்தார்கள்.

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி அருகே முல்கியில் பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று இருந்தார். மாலையில் அவர் பெங்களூரு மகாதேவபுராவிலும், பெங்களூரு தெற்கு தொகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டார். அதன்பிறகு, நேற்று இரவு பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் தோன்றி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள்.

அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதுதவிர மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் மாகடி, துமகூரு, தொட்டபள்ளாப்புரா, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர், கோலார், மங்களூருவில் சூறாவளி பிரசாரம் செய்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

கர்நாடகத்தில் நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதை பார்க்க முடிந்தது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. 6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவு பெறுவதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

பிரசாரம் ஓய்ந்ததையொட்டி இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் நாளான 10-ந் தேதி மாலை 6 மணி வரை மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் எங்கும் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது எனவும் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

 

Share this story