கத்திரிக்கா முத்தி கட்சிப்பேனர் வரை வந்ததோ : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

By 
marudhu187

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

* எடப்பாடி முதல்வராக இருந்தபோது, தனது சம்பந்தியை வைத்து சாலை போடும் டெண்டர் ஒன்றில் 4500 கோடியை தூரு வாரிய விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதி மன்றத்தில் முறையீடு செய்த தி.மு.க. 

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்கை தாங்களே விசாரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்து மேற்படி வழக்கை திரும்பப் பெற்ற நிலையில், இப்போது அந்த வழக்கையே விசாரிக்க வேண்டியதில்லை என்னும் கோரிக்கையை நீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறது.

ஆக, பலவீனமான கூட்டணியை அடம்பிடித்து அமைத்து தி.மு.க. வை ஆட்சிக்கு வரவைத்த எடப்பாடிக்கு தி.மு.க.ஆட்சி நன்றிக்கடன் செலுத்துவதற்கு இந்நிகழ்வே சாட்சியாகும்.

இதேபோல, கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்திலும் விசாரணை மாடங்களை மாற்றி வழக்கை நீர்த்துப் போகச் செய்வதிலேயே குறியாக திமுக இருக்கிறது.

ஆக, இரு தரப்புக்குமான திரைமறை உறவுக்கு இதுவும் கூடுதல் சான்றாகும். இதனை புரிந்துகொண்டு எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனியினர் இப்போது எடப்பாடி படத்தோடு முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் சேர்த்தே பேனர்களை வைக்கத் தொடங்கி விட்டனர். 

ஆக..கத்திரிக்காய் முத்தி கடைத்தெருவுக்கு மட்டுமல்ல கட்சி பேனர் வரை வந்துவிட்டது. 

* ஓ‌பி.எஸ் அவர்களை செல்லாக்காசு என்கிறார் செல்லூர் ராஜூ.

துரோகியினும் கொடியவன் துரோகத்திற்கு துணை போகிற அடியவன்தான் என்றால், அந்த ரகத்தில் இடம் பிடித்துள்ள காரியக்கோமாளிதான் இந்த செல்லூர் லாசு.

இவரது துரோகத்திற்கான தண்டனை என்பது, நிச்சயம் அவரது அரசியல் கழுவேற்றம் தான். இதனை மதுரை மண்ணில் உப்பு உரைப்பு போட்டு உண்ணும் மக்கள் கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story