கே.சி.வீரமணி வீட்டில் சோதனை : லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிர்ச்சி..

KC Veeramani home raid Anti-corruption department shocked ..

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில், ரொக்கமாக 34 லட்சத்து 1,060 ரூபாய், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும்

பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 623 பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். 

நட்சத்திர ஹோட்டல்-மணல் கடத்தல் :

இது தவிர கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டது.

இந்த மணல் லாரிகள் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு மூத்த அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணி பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்தி வருவதாக, ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது. 

இது மட்டுமின்றி, அமைச்சராக கே.சி.வீரமணி பதவி வகித்தபோது, அவர் பல்வேறு இடங்களில் கட்டி வந்த கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல் கட்டுமானப்பணிக்கு பாலாற்று மணல் அதிக அளவில் கடத்தப்பட்டு, கட்டிடப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தவிர, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளையொட்டியுள்ள பாலாற்று பகுதிகளில் இருந்து கே.சி.வீரமணி தனது ஆதரவாளர்கள் மூலம் மணலை கடத்தி ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜோலார்பேட்டை, இடையம்பட்டி காந்திரோட்டில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புப்பிரிவு துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் ஆற்று மணல் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை உறுதி செய்துள்ளது.

கே.சி.வீரமணியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மணல் வருவாய்த்துறை மூலம் அதன் தற்போதைய சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டு, எவ்வளவு யூனிட் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மணல் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும்.

தனி விசாரணை :

அதன்பேரில், அவர்களிடம் புகார் பெறப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது மணல் பதுக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மணல் கடத்தல் தனியாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

மேலும், கே.சி.வீரமணியின் வீட்டில் அமெரிக்க டாலர் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.சி.வீரமணியின் வீட்டிலிருந்து 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கள் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

Share this story