அண்ணாமலை குறித்து, கே.எஸ்.அழகிரி பகீர் தகவல்..

By 
ksa7

காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை. 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும்.

வெறுமனே குற்றம் சாட்டக்கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story