பதவிகளை ஏலம் விட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு

By 
Legal action if positions are auctioned Election Commission order


தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. 

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 

தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து  உரிய உத்தரவுகளை  பிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, கடந்த 15-ந்தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளான பதவி இடங்கள், ஏலம் விடப்படுவதாக செய்திகள் வருகின்றன. 

இதுபோன்ற நிகழ்வுகள், மக்களாட்சி தத்துவத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. தண்டனைக்குரியது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவி இடங்கள், இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதால், இவற்றை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் தக்க முன்ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story