"திருக்குறள் போல் நெறிப்படுத்தி.." முதல்வர் ஸ்டாலின் உவமை பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் புதிய தொழில்முனைவோர் பங்கு பெறும் தமிழ்நாடு ஸ்டார்அப் திருவிழா இன்று தொடங்கியது.இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கலையில் சிறந்த தமிழ்நாடு என்ற வகையில் தொழிலில் சிறந்த தமிழ்நாடு என்கிற நிலையை நோக்கி தமிழகம் முன்னேறி கொண்டிருக்கிறது. இந்த துறையின் 2 ஆண்டுகால வளர்ச்சிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் உழைப்பே சான்று.
பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதை போன்று சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும் முக்கியமானது. தொழில் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு மிகவும் அக்கறை செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தொழில் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மிக பிரமாண்டமான அளவில் ஸ்டார்ட் அப் திருவிழா நடத்த வேண்டும் என அமைச்சர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனை நான் கோவையில் நடத்துமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஏனென்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர். இதனால் அங்கு நடத்துங்கள் என கேட்டுக்கொண்டேன்.
இன்று மிக பிரமாண்டமான அளவில் 450-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன் இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவானது நடக்கிறது. இதனை பார்வையிட மாணவர்கள், தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மேலும் புத்தாக்க தொழில் கருத்தரங்கு மற்றும் சந்திப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில் நிறுவனங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2021 மார்ச் மாத காலகட்டத்தில் தமிழகத்தில் 2,300 ஸ்டார்ப் நிறுவனங்களே இருந்தன. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையானது 3 மடங்காக உயர்ந்து, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
எந்த துறையாக இருந்தாலும் தமிழ்நாடு அதில் சிறந்து விளங்குகிறது. புத்தாக்க சிந்தனையோடு, தொழில் முனைவில் ஈடுபடும் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு ஆதார நிதியும் வழங்கி வருகிறோம். இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை நிதி ஆதார உதவி வழங்கி உள்ளோம்.
2022-23 ம் நிதியாண்டில் மதுரை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார புத்தாக்க தொழில் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதே போன்று நடப்பாண்டில் சேலம், கடலூர், ஓசூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வட்டார புத்தாக்க மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசானது மக்கள் அளித்த அதிகாரத்தை வானளவியதாக நினைப்பது கிடையாது.
நாங்கள் திருக்குறளை போல நெறிப்படுத்தி எங்கள் அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம். தி.மு.க ஆட்சியில், வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே ஆகும். அதனை நோக்கியே பல்வேறு திட்டங்களை எங்கள் ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.