உதயநிதி ஸ்டாலின் வாழ்க.. நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்.. கடைசியில் எஸ்கேப் ஆன திமுக எம்பிக்கள்..

By 
nma

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பதவிப் பிரமாணத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பெயரை கூறிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்த சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் வேறொன்றுமில்லை. உதயநிதி ஸ்டாலின் வாழ்க என்று சொன்னதைத்தான் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது பதவிப் பிரமாணத்தை, தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என்று கூறி முடித்தார். அதேபோல் கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்உதயநிதி ஸ்டாலினின் எதிர்கால தலைமைக்கு ஆதரவு தெரிவித்தார். நமது வருங்கால உதயநிதி ஸ்டாலின் வாழ்க,'' என்றார்.

"பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்க, தலைவர் தளபதி வாழ்க, இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க" என்று காஞ்சிபுரம் எம்பி செல்வம் தனது உரையை முடித்தார். அரக்கோணம் எம்பி எஸ் ஜெகத் ரக்‌ஷகன், "தமிழ் வாழ்க, தலைவர் கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க" என்று பேசினார். மற்ற திமுக எம்பிக்களான காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் அரக்கோணம் எம்பி எஸ் ஜெகத்ரட்சகன் போன்றவர்களும் இதே கருத்தை எதிரொலித்து, திமுக தலைவர்களை பாராட்டி பேசினார்கள்.

மேலும், தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் தனது பதவிப் பிரமாணத்தில் கருணாநிதி, பெரியார், மு.க.ஸ்டாலின், உத்யநிதி ஸ்டாலின் எனப் பலரின் பெயர்களையும் சேர்த்துள்ளார். இருப்பினும், அனைத்து எம்.பி.க்களும் இந்தப் போக்கைப் பின்பற்றவில்லை. தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, பெரும்பலூர் எம்.பி., அருண் நேரு போன்ற, எம்.பி.,க்கள், தமிழகத்தின் முன்னேற்றத்தையும், தி.மு.க.,வின் சாதனைகளையும் எடுத்துரைப்பதில் கவனம் செலுத்தினர்.

ஆச்சரியமான திருப்பமாக, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சில பிரபல எம்.பி.க்கள் குறிப்பிட்ட தலைவர்களின் பெயர்களை எதுவும் குறிப்பிடாமல் நேரடியாக சத்தியப் பிரமாணத்தை செய்தனர். மேலும், நாமக்கல் எம்பி வி.எஸ்.மாதேஸ்வரன், திமுக தலைவர்கள் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சனாதன தர்மம் தொடர்பான வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது கூடுதல் விஷயமாகும்.

நாடாளுமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக எம்பிக்கள் உதயநிதி வாழ்க என்று கூறியிருப்பது திமுகவின் அடுத்த தலைமை உதயநிதி ஸ்டாலின் தான் என்று உணர்த்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சீனியர் எம்பிக்களான டி.ஆர் பாலு, ஆ.ராசா போன்றோர் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

திமுக எம்பிக்கள் பேசும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் அடுத்த முறை எம்பியாக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்றும், கடைசி வரை கொத்தடிமை தான் என்றும், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெயர்களுக்கு அடுத்து இன்ப நிதியை மறந்து விட்டார்கள் என்றும் கலாய்த்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

Share this story