'மதி சந்தை' இணையவழி விற்பனை தளம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By 
mart1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எந்த திட்டமாக இருந்தாலும், அதனைக் கண்காணித்துக்கொண்டே இருந்தால் தான் அது தொய்வில்லாமல் தொடரும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை ஆகிய நான்கு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு செய்கிறோம். உங்களிடம் முழுமையான புள்ளிவிபரங்கள் இருக்கும்.

இருப்பினும், சில முக்கியத் தகவல்களை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2023-2024-ம் ஆண்டில் புதியதாக 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குச் சுழல் நிதியாக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 75 கோடி ரூபாயும், 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக 7.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், 2023-24-ம் ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 'மதி சந்தை' என்ற இணைய வழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் 'மதி அங்காடிகள்' நிறுவப்படுவதுடன், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 'மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்' வழங்கப்படவுள்ளன.

மேலும் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் 'மதி திணை உணவகங்கள்', ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்றுவித்து, அவர்களின் பங்கேற்பின் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

"நன்றே செய்-அதையும் இன்றே செய்" என்ற வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


 

Share this story