மதுசூதனன் கவலைக்கிடம் : அடுத்து, அதிமுக அவைத்தலைவர்..
 

By 
Madhusudhanan worries Next, AIADMK leader ..

அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து வரும் மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திடீரென மூச்சு திணறல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு பதில் வேறு ஒருவரை அ.தி.மு.க. அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அ.தி.மு.க.வில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் உள்பட ஒருசிலர்தான் உள்ளனர்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது அமைச்சரவையில், பொன்னையன் பல ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றி உள்ளார். போக்குவரத்து துறை, கல்வித்துறை, தொழில்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் மட்டுமின்றி ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சர் உள்பட பல்வேறு துறைகளை பார்த்தவர்.

சசிகலாவுக்கு எதிர்ப்பாளராக விளங்கும் பொன்னையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடமும் நன்மதிப்பை பெற்று கட்சியில் பணியாற்றி வருபவர்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்-செய்தி தொடர்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் பொன்னையன் அ.தி.மு.க. அவைத் தலைவராக விரைவில் நியமிக்கப்பட கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.

அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவிக்கு இதுவரை வயது முதிர்ந்தவர்களான வள்ளி முத்து, புலமைப்பித்தன், மதுசூதனன் போன்றோர் இருந்துள்ளதால், அந்த வரிசையில் கட்சியில் மூத்த உறுப்பினரான பொன்னையனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story