திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது ஆவார்கள்: எடப்பாடி பழனிசாமி

By 
103

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொது செயலாளருமான கே.பி.முனுசாமியின் தந்தை பூங்காவனம் (103), வயது மூப்பு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். 

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமியின் இல்லத்துக்கு வருகை தந்து, பூங்காவனத்தின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்,

“வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால், திமுக அரசு அதனை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால்தான் சென்னை மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். 

முதல்வர், பருவமழைக்கு முன்பே உயர் அலுவலர்களை அழைத்து உரிய ஆலோசனை நடத்தவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே உரிய ஆலோசனைகள் நடத்தி பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக, 1,400 ராட்சத மின் மோட்டார்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்து தாழ்வான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மழை பெய்தவுடன், உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றினோம். மேலும், சென்னையில் மண்டல வாரியாக ஒரு ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அரசு ஆலோசனைப்படி மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர். 

அம்மா உணவகங்களில் தரமான உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இதில் ஒன்றைக் கூட தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மாறாக சில இடங்களில் அம்மா உணவகங்கள் முடக்கப்பட்டும், மூடப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் சென்னையில் 2400 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1246 கி.மீ தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், இரண்டரை ஆண்டுகளாக கவுன்சிலர் முதல், அமைச்சர்கள் வரை கமிஷனுக்கு ஆசைப்பட்டு, மீதமுள்ள பணிகளை முடிக்காமல் விட்டுள்ளனர். 

மிக்ஜாம் புயலால், சென்னை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு பிறகும் அரசு விழித்துக்கொள்ளவில்லை. தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக அரசால் தொடங்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்த பக்கீல் கால்வாய் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் அப்பகுதியில் 7,000 மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இந்த அரசு எதற்கெடுத்தாலும் ஒரு குழுவை மட்டுமே அமைத்துவிட்டு திராவிட மாடல் அரசு என்பது குழு அரசாக செயல்படுகிறது. 

திமுக அரசு செயலற்று, பொம்மை முதல்வராக உள்ளார். இண்டியா கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது வேற்றுமைகள் உள்ள, 26 கட்சிகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு தலைவர் இந்தியில் பேச வேண்டும் என்கிறார்.

ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். தற்போது அந்த கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. எப்போது நெருப்பு வரும் என்று தெரியவில்லை. அடுத்தக் கூட்டம் நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. திமுகவின் 2 அமைச்சர்கள் மட்டுமே தற்போது குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது. தற்போது திமுக ஆட்சியில் படும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது: என்று அவர் கூறினார்.

 

Share this story