அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் கைது : அமலாக்கத்துறை அதிரடி

 

By 
sbed

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.

கொச்சியில் கைது செய்யப்பட்ட அசோக் குமாரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Share this story