அமைச்சர் துரைமுருகனின் கூற்று, உண்மைக்கு புறம்பானது : ஓபிஎஸ் பதில்

Minister Thuraimurugan's statement is untrue OBS answer

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

முல்லைப் பெரியாறு அணையை, நான் ஆய்வு செய்தது இல்லை. பார்வையிடவில்லை என்ற அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 

2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலான பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் 2021 வரை அம்மாவட்ட பகுதி அமைச்சர் என்ற முறையிலும்,

படகில் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் பாக்கியத்தை பெற்றதோடு பேபி அணை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்த அனுபவமும் எனக்கு உண்டு என்பதை நான் இந்த தருணத்தில் எடுத்துக் கூற விரும்புகிறேன். 

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 14 முறை நான் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு சென்று தண்ணீரை பாசனத்திற்காக திறந்துவிட்டு ஆய்வு செய்து இருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையே முல்லைப் பெரியாறு அணையுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க, நான் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டதே இல்லை என்று அனுபவம் வாய்ந்த அமைச்சர் கூறுவது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் எந்த பிரச்சினை குறித்தும் பேசக்கூடிய முழு தகுதி அ.தி.மு.க.வுக்கு உண்டு என்பதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தார்மீக உரிமை தி.மு.க.வுக்கு இருக்கிறதா என்பதை தி.மு.க.வின் கடந்த கால நடவடிக்கைகளில் இருந்தே அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

முல்லைப்பெரியாறு அணை குறித்து தற்போதைய கேள்விகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடனா என்பதும், கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்றால் அங்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதும், 

தமிழ்நாடு அரசின் ஒப்புதலுடன் என்றால் இது குறித்து விவசாயிகளிடமும், பிற கட்சிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்பதும், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பு கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதும்தான்.

இதற்கு தெளிவான பதிலை அளிக்காமல், நதிநீர் உரிமையை நிலைநாட்டிய அ.தி.மு.க.வை குறை கூறிப்பேசுவது கண்டிக்கத்தக்கது. 

இதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகமும் தெளிவாகிறது.

விவசாயிகளின் சந்தேகத்தை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கின்ற நிலையில், அதை தெளிவுபடுத்தாத காரணத்தால் அதனைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இனியாவது நடந்தது என்ன? என்பதை தமிழ்நாடு அரசு விளக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையெனில், அதற்குரிய விளைவுகளை தி.மு.க. சந்திக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story