எதிர்க்கட்சிகள் கூட்டணியை வீழ்த்த, மோடி அதிரடி வியூகம்..

By 
pe5

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மோடியை வீழ்த்த தயாராகி வருகின்றன.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடின. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ்தாக்கரே) உள்பட 15 கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருவது அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேலும் கட்சிகளை தங்கள் அணியில் சேர்ப்பது, கூட்டணிக்கு தனியாக செயல்திட்டங்கள் வகுப்பது பற்றி விவாதிக்க இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியை பலமாக்கி தேர்தலை சந்தித்தால் மோடிக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியில் பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஏற்கனவே மாநில வாரியாக பா.ஜனதா உறுதியாக வெற்றிபெறும் தொகுதிகள், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்துள்ளார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 350 தொகுதிகளை இலக்காக வைத்து தேர்தல் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தேர்தல் களத்தில் நெருக்கடி வரும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூட்டணியை திணறடிக்கும் வகையில் வியூகங்களை அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜனதாவின் முக்கிய அஜன்டா காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது ஆகியவை தான். இதில் 2 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டது. 3-வது வாக்குறுதி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதுதான். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கொண்டுவந்து நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளார்கள்.

முக்கியமாக இந்த சட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் திணறடிக்க முடிவு செய்தே தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த ஆயுதத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜனதாவின் வியூகத்துக்கு கைமேல் பலன் கிடைப்பது போல் இந்த சட்டத்தை ஆதரிக்கப் போவதாக ஆம்ஆத்மியின் கெஜ்ரிவாலும், உத்தவ் தாக்கரேயும் அறிவித்துள்ளார்கள்.

டெல்லி, மராட்டியத்தில் பெரும் பான்மையினரின் வாக்குகள் முக்கியம் என்பதால் இந்த கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன. இதேபோல் காங்கிரஸ் இருக்கும் அணியில் இடம் பெற போவதில்லை என்பதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் உறுதியாக இருக்கிறார்கள்.

கேரளாவில் காங்கிரஸ்-கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைக்கப்போவதில்லை. மாநிலம் வாரியாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் வெற்றியை அறுவடை செய்ய முடிவு செய்துள்ளன. அதேநேரத்தில் மாநில அரசியலுக்கு ஏற்ப எதிர்க் கட்சிகளையும் பிரித்து மோத வைக்க மோடியும் வியூகம் அமைத்துள்ளார்.
 

Share this story