இதை, மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும் : அமமுக அறிவுறுத்தல்..

'நீங்கள் உண்மையிலேயே ஒரு வலிமையான வல்லரசை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால்..' என மத்திய அரசை வலியுறுத்தி, அமமுக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கே.எஸ்.கோனேஸ்வரன் அறிவுறுத்தியுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஆளுநருக்கு எதிராக, தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து இருக்கிறது திமுக. இது சரிதான் என்றாலும், இவ்வளவு கால தாமதத்திற்கு காரணம் என்ன? பிஜேபியை பார்த்து திமுக பயப்படுகிறது என்பது தான் உண்மை.
ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் சரிதானா? என்று பார்த்தால், அவர் எல்லை மீறுகிறார் என்பது உண்மை. இது ஜனநாயகத்தை அளிக்கும் முயற்சி என்று தான் இவரின் நடவடிக்கைகள் தெரிகிறது.
சரி.. இப்படி பார்ப்போம்; மோடியின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும், ஜனாதிபதி நிறுத்தி வைத்தால், அல்லது நிராகரித்தால், மோடி இதை ஏற்றுக் கொள்வாரா?
அந்த கவலை மோடிக்கு கிடையாது. ஏனென்றால், ஜனாதிபதி இவர் ஆள்.
பிஜேபி என்ன செய்ய சொல்கிறதோ அதை அவர் செய்யப் போகிறார். எனவே, பிஜேபி தன் ஆளுநர்களை மாநிலங்களில் நியமித்து, தன் இஷ்டம் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களை ஆட்டி வைப்பது ஜனநாயகத்திற்கு எதிரான அடாவடித்தனம் என்பதுதான் உண்மை.
மோடி.. ஒரு மாநிலத்தின் முதல்வராக பல ஆண்டுகள் ஆட்சி செய்தவர். ஆனால், தான் முதல்வராக இருக்கும்பொழுது, மாநில உரிமையை பற்றி வாய் கிழிய பேசிவிட்டு, இன்று ஆளுநர்களை வைத்து அடக்கியாள ஆசைப்படுவது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேளையில், பிஜேபி முழுமையாக இறங்கிவிட்டது. இது எங்கு கொண்டு போய் விடுமோ என்று தெரியவில்லை. மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் அரசை தேர்ந்தெடுக்கிற அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை செயல்படாமல் அடக்குவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மாநிலங்களின் வளர்ச்சிதான்.
ஒரு மாநிலத்தை அதன் வலிமையில் செயல்பட விடாமல், தான் நினைப்பதுபோல், மத்திய அரசு நடத்த நினைத்தால், அந்த மாநில அரசு வலிமை இழந்து அடிமையாகிப் போகும்.
இறுதியில், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி சீர்கெட்டு தரைமட்டமாகும் என்பதை பிஜேபி ஏன் புரிந்து கொள்ளவில்லை?
தன் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் எதனால் அழிந்து நாசமாகி போய்க் கொண்டிருக்கிறது என்பது மோடிக்கு தெரியாதா? இதை சரியாக புரிந்துகொண்டு, மாநில அரசை அவர்கள் விருப்பம்போல், ஆட்சி செய்ய விடுவதுதான் இந்திய இறையாண்மைக்கு நல்லது.
ஒரு மாநில அரசு தவறு செய்கிறது என்றால், அதற்கு உரிய தண்டனையை அந்த மாநில மக்கள் தேர்தலில் கொடுக்கப் போகிறார்கள். மத்திய அரசுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.?
தன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மக்களை அடிமைப்படுத்த நினைப்பது சர்வாதிகாரம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதை தெரிந்துகொள்ள மத்திய அரசு வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு வலிமையான வல்லரசை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால், அது மாநிலங்களின் சுயாட்சியால் மட்டுமே நடக்கும் என்பதை மோடி அரசு புரிந்து, மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடாமல், கட்டமைக்கும் வேலையை செய்ய வேண்டும், அதுவே ஜனநாயகத்திற்கும் பிஜேபிக்கும் நல்லது.
இதில், திமுக எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழியை போட்டுக்கொண்டு, தன் கடமைகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருப்பதை விட்டுவிட்டு, தன் பணிகளை செய்வதுதான் அவர்களுக்கும் நல்லது.
இவ்வாறு அமமுக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கே.எஸ்.கோனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.