தற்கொலை மிரட்டல் பேச்சு : நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்

By 
vl88

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது தற்கொலைக்கு சீமான் தான் காரணம் எனவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். தற்போது பெங்களூர் நகரில் வசித்து வரும் முன்னாள் நடிகையான விஜயலட்சுமி என்பவர், எங்களின் கட்சித் தலைவர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டோடு புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டு புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் கட்சி தலைவர் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலட்சுமி என்ற பெண்ணோடு இணைந்து கூட்டு சதியில் ஈடுபடுகின்றனர். விஜயலட்சுமியை தூண்டி விட்டும், அவருக்கு உதவிகள் செய்தும், சீமான் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை கூறி மீண்டும் ஒரு புகாரை காவல் ஆணையரிடம் விஜயலட்சுமி கடந்த மாதம் கொடுத்தார்.

சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு கடந்த ஒரு மாதமாக விஜயலட்சுமி செயல்பட்டு வந்தார். இந்த திட்டம் நிறைவேறாத காரணத்தால் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

தற்போது ஐகோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், சீமானை மிரட்டி பணம் பறிக்கும் வகையில் விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீர் மற்றும் உணவு அருந்தாமல் தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்கு சீமான் தான் காரணம் என விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பலர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய விஜயலட்சுமி, ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உள்ளார். தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாக சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் விஜயலட்சுமி மிரட்டுகிறார். எனவே விஜயலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Share this story