புதிய மருத்துவக் கல்லூரிகள் திட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

New Medical Colleges Project Minister Ma Subramaniam's explanation

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியிருப்பதாவது :

15-18 வயதுக்குட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதில், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் குழந்தைகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

தகுதி உள்ள 33 லட்சம் குழந்தைகளில் 23 ½ லட்சம் பேர் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். 

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு இந்தியாவுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.

முதல்வர் அறிவுறுத்தல் :

முன்களப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள், 60 வயதை கடந்து இணை நோய் உள்ளவர்கள், ஏப்ரல் 14-ந் தேதிக்கு முன்னால் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 4 லட்சம் பேர் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு, தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் கையிருப்பில் தயாராக வைத்து இருக்கிறார்கள். 

இதனால், ஏப்ரல் 14-ந் தேதி முன்பால் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும்.

சென்னை மாநகராட்சியில் 73 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கான பட்டியல் தயாரித்து முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார், டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்மாதிரியாக இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்கிறோம்.

90 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த எண்ணிக்கை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

மெகா தடுப்பூசி முகாம் :

இந்த வாரம் பொங்கல் விடுமுறை என்பதால், வருகிற சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தவில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமைதான் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

அதே வேளையில், 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மெகா தடுப்பூசி முகாமுக்கு காத்து இருக்காமல், தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு சென்று தடுப்பூசியை போட்டு கொள்ளவேண்டும்.

11 மருத்துவக் கல்லூரிகள் :

தமிழகத்தில், இன்று திறக்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகள் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதாக கூறி வருகிறார்கள். 

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, வெளியிடப்பட்ட அரசாணையில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்ததாக கூறுவது தவறு. புதிய மருத்துவக் கல்லூரிகளை அ.தி.மு.க. தாமதப்படுத்தியதாக தான் கூற முடியும்.

2011-ம் ஆண்டு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மகத்தான திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிவித்தது தி.மு.க. ஆட்சியில்தான். அதைதான் பிரதமர் மோடியும் அமல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில், இன்னும் 5 மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக இன்று ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். 

ஏற்கனவே, புதிய மருத்துவக் கல்லூரிகள் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும் அங்கு பலகை மட்டும் உள்ளது. 

இதுபோன்று ஆட்சி நடத்தியவர்கள், புதிய மருத்துவக் கல்லூரி திட்டத்தைக் கொண்டு வந்தோம் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?' என்றார்.
*

Share this story