புது கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்..

By 
o.paneer2

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அங்கீகரித்திருந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முழுமையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்திருக்கிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர், கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகளையும் கொடுத்து வந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணத்திலேயே இருந்து வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.

அதேநேரத்தில் அவருடன் இருக்கும் ஆதரவாளர்கள் அனைவரையும் தன்பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் உள்ளார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தன்னுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் சென்று விட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஓ.பி.எஸ். உணர்ந்துள்ளார்.

இதையடுத்து ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள அவர் காய் நகர்த்தி வருகிறார். இப்படியே தனது நிலைப்பாட்டை கொண்டு சென்றால் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. பக்கம் சென்று விடுவார்கள் என்கிற அச்சமும் ஓ.பி.எஸ்.சுக்கு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆதரவாளர்களை தன்வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்காக புதிய கட்சியை தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க திட்டமிட்டு உள்ள ஓ.பன்னீர் செல்வம் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. அல்லது புரட்சித் தலைவி அ.தி.மு.க. என 2 பெயர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

Share this story