முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி: சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

By 
thanks

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில் "சட்டப்பேரவை 110 விதியின் கீழ் தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும். வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படும்" என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதன்பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து பேசுகையில், “தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்கள் மகிழத்தக்க வகையில் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்” என தெரிவிர்த்தார். இதற்கு அதிமுக-வினர் பலரும் சற்றே முகச்சுளிப்பை வெளிப்படுத்தினர். 

கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எங்களது கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “இருக்கை விவகாரத்தில் சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன். விதிப்படி, சட்டப்படி முழுமையாக யாருடைய மனம் நோகாமலும், உரிமையை பறிக்காமலும் அவை நடைபெறுகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பமாக மாறியது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. சபாநயகர் இருக்கை முன்பு இபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் பதிலில் திருப்தியில்லை” எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Share this story