எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் மரணம்: யார் இவர்? - முழு பின்புலம்..

By 
erer

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. இவர், புதினை கடுமையாக எதிர்த்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் என்ற பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் அலெக்ஸி நவல்னி. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிறையில் வெள்ளிக்கிழமை வாக்கிங் சென்ற நவல்னி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாகவும், இதன்பின் மருத்துவர்கள் முதலுதவிக்கு பின் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், என்னும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தாகவும் ரஷ்ய சிறைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 நவல்னியின் மரணம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

யார் இந்த அலெக்ஸி நவல்னி? 

சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கும் அரசியல் வட்டாரங்களில் அதிகம் அடிபட்ட பெயர்களுள் ஒன்றுதான் அலெக்ஸே நவல்னி. ‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவர். வழக்கறிஞர், ஊழலை - அதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துவருவதாக நம்பப்படும் ஊழலை தீவிரமாக எதிர்த்தவர்.

எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். ரஷ்யாவில் மக்களுக்கிடையே இவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு காரணமாகவும், புதினின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டில் ஊழலுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்ததால் உலக அளவில் பேசப்பட்டவர்.

நவல்னிக்கு யூடியூபில் 60 லட்சத்துக்கு மேற்பட்டும் ட்விட்டரில் 20 லட்சத்துக்கு மேற்பட்டும் ஆதரவாளர்கள் இருப்பது அவருடைய செல்வாக்கைக் காட்டுகிறது. இவ்விரு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திதான் ரஷ்ய அரசின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தினார். இதைப் புதினால் தாங்கிக்கொள்ள முடியாததால் அவரைச் சிறையில் அடைத்தார் என்று கூறப்படுவது உண்டு.

Share this story