கோழி கதைகள் கூறுவதில் பவன் கல்யாண் கில்லாடி : அமைச்சர் ரோஜா தாக்கு

ஆந்திர மாநில ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாக அரசியல் சார்ந்து புயலைக் கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், பவன் கல்யாண் ருஷி கொண்டா சென்றிருந்தார். அங்கு செல்ல அவருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி அங்கு சென்ற பவன் கல்யாண் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்தார்.
ருஷிகொண்டாவில் பெரிய விதிமீறல்கள் அரங்கேறுகிறது. இங்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் என குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து 'பொய்களை' உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. அந்த நிலம் சுற்றுலாத் துறைக்கு சொந்தமானது. அரசு தனது நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு என்ன ஆட்சேபனை என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி. அவருக்கு யாரும் சமமாக முடியாது. சந்திரபாபு நாயுடுவுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கிறார். பவன் கல்யாண் அரசு நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதை வீடியோ எடுத்துள்ளார். அவர் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.