ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி?

By 
ramn1

பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக பேசி வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் கொண்ட தென் பகுதிகளில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களுடன் ஜே.பி.நட்டா நேற்று ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை அதிக அளவு பா.ஜ.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்று மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு, கட்சி உள்கட்டமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் அவர் மாநில தலைவர்களுடன் விவாதித்தார்.

விரைவில் பா.ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம் பற்றிய தகவல் வழங்கப்படும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் மாநில தலைவர்களிடம் நட்டா தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் மிக முக்கியமான விசயம் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த தொகுதியை தேர்வு செய்ய ஆய்வு பணி நடந்து வருவதாகவும் மாநில தலைவர்களிடம் ஜே.பி. நட்டா தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். பிறகு அவர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று இந்த தடவையும் 2 தொகுதிகளில் போட்டியிட மோடி திட்டமிட்டுள்ளார். வாரணாசியிலும், தென் மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் களம் இறங்க அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

தென் மாநிலத்தில் போட்டியிடுவதன் மூலம் பா.ஜ.க. செல்வாக்கை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கருதுவதாக தெரிகிறது. பிரதமர் மோடியின் விருப்பம் பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா தெரிவித்ததும் தென் மாநில தலைவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தென் மாநிலங்களில் எந்த தொகுதியில் போட்டியிட்டால் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலான தென் மாநில தலைவர்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. ஏற்கனவே இதுபற்றி ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரதமர் மோடியை போட்டியிட வைக்கலாம் என்று மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் ராமேஸ்வரம் புனித தலமும் அடங்கி உள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் பிரதமர் மோடி அந்த தொகுதியை விரும்புவதாக கூறப்படுகிறது.

வட இந்தியாவில் காசியிலும், தென் இந்தியாவில் ராமேஸ்வரத்திலும் போட்டியிடுவதன் மூலம் புதிய எழுச்சியை உண்டாக்க முடியும் என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் தற்போது நவாஸ் கனி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. எனவே பிரதமர் மோடி அந்த தொகுதியில் போட்டியிடு வாரா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை குறைந்த பட்சம் 50 தொகுதி களில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜனதா இலக்கு நிர்ணயித்து உள்ளது. பிரதமர் மோடி தென் மாநிலங்களுக்கு வரும் பட்சத்தில் இதற்கான வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் உருவாக்க முடியும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அதற்காக முழு மூச்சுடன் உழைக்க தயாராக இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story