அரசியல் சதுரங்கம் : தமிழகத்தில், பாஜக தலைமையில் தனி கூட்டணி..

By 
nbjp

 நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டத்திற்கு வர தாமதமான நிலையில், அவர் இல்லாமலேயே கூட்டம் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் 11.55 மணிக்கு அண்ணாமலை வருகை தந்தார்.

இதனிடையே அதிமுக விலகியதால், தமிழ்நாட்டில் புதிய கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முழுநேர பணியாளர்களை விரைவில் நியமிக்க பாஜக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் முழு நேர பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. பாஜக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடுவது புதிதல்ல என கேசவ விநாயகம் பேசியிருந்தார்.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து.அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதால் 2 கோடி கருத்துகள் கூட வரலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக செய்தியாளர்களை அண்ணாமலை சந்திக்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

Share this story