அரசியல் சதுரங்கம் : தனிக்கட்சி-3-வது அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆயத்தம்..

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் 3-வது அணியை அமைப்பதற்கும் ஆயத்தமாகி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு அழைத்து பிரதமர் அருகில் அமர வைத்து முக்கியத்துவம் கொடுத்ததை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அந்த கூட்டத்துக்கு அழைக்காமல் பா.ஜனதா புறக்கணித்திருப்பதையும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் எப்படியாவது பாரதிய ஜனதா கட்சி சமரசம் பேசி ஓ.பன்னீர்செல்வத்தையும் தங்களையும் அ.தி.மு.க.வில் கொண்டு போய் சேர்த்து விடும் என்றே ஆதரவாளர்கள் நம்பி இருந்தனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ கடைசி நேரத்தில் காலை வாரியது போல ஓ. பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளாமலேயே விட்டு விட்டது.
இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் பாரதிய ஜனதா மீது கடுமையான மனக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். பாரதிய ஜனதா கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுக்கும்பட்சத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் போய் சேர முடியாது என்பதையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உணர்ந்துள்ளனர். தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆதரவாளர்களின் இந்த எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில்,
தமிழகத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இல்லாத அணியை பாராளுமன்ற தேர்தலில் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புரட்சி தலைவர், புரட்சி தலைவி வழியில் தொண்டர்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை வருகிற 3-ந்தேதி அன்று காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். தொடங்குகிறார். அன்று அவர் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். அ.தி.மு.க. விவகாரத்தில் எங்கள் பக்கம் சாதகமான சூழல் இல்லாத நிலையில் தனிக்கட்சி தொடங்குவது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பிறகு எங்களோடு ஒத்த கட்சிகளாக இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசை விரும்பாத கட்சிகளோடு சேர்ந்து பயணிக்க திட்டமிட்டு வருகிறோம். இது நிச்சயம் வலிமையான 3-வது அணி போன்று அமைய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் முடிந்து விட்டது என்று எங்களைப் பற்றி பலர் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.
அதனை பொய்யாக்கும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். எங்கள் வாக்கு வங்கி என்ன என்பதை பாராளுமன்ற தேர்தலில் நிரூபித்துக் காட்டவே களம் இறங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.