அரசியல் சதுரங்கம்: சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..?

மக்களவை தேர்தலை மனதில் வைத்து மகளிருக்கு 1000 ரூபாய் திட்டத்தை திமுக செயல்படுத்தி இருப்பதாக சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகார மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் தாம் ஈடுபட்டு வருவதாக சசிகலா சொல்வதும், அதை இபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக-வின் 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை சசிகலா வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;- தமிழ்நாட்டில் செயல்படும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் அளவிற்கு திமுக அரசு உள்ளது.
தண்ணீர் வந்தால் மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதால் காவேரி விவகாரத்தில் திமுக அழுத்தம் சந்தேகம் ஏற்படுகிறது என்றார். மக்களவை தேர்தலை மனதில் வைத்து மகளிருக்கு 1000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் திரைத்துறை ரெட் அலர்ட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. திமுக வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒன்றிணைப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன் என சசிகலா கூறியள்ளார். சசிகலா கூறியுள்ளதை அடுத்து இருவருக்கும் இடையேயான சந்திப்பு விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.