அரசியல் சதுரங்கம் : உள்ளாட்சித் தேர்தலில், திமுகவுடன் தேமுதிக கூட்டணி..

Political Chess Temujin alliance with DMK in local elections.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜயகாந்தை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண உதவியை விஜயகாந்த் வழங்கினார்.

இதன் மூலம் தி.மு.க.- தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் இதையே விரும்புகிறார்கள். 

தற்போதைய சூழலில், தனித்துப் போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்கிற நிலையே உள்ளது என்று தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

நிர்வாகிகள் கருத்து :

கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என பல நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.

அதனை உள்ளாட்சி தேர்தலில் சரிகட்டும் விதத்தில் தே.மு.தி.க.வின் செயல்பாடு இருக்கும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தே.மு.தி.க.வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 

தேமுதிக திட்டம் :

சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்டது போல உள்ளாட்சி தேர்தல் களத்தில் நடந்து விடக்கூடாது என்பதில் அந்த கட்சி தீவிரமாக உள்ளது.

இதையடுத்து, தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து, களம் இறங்க தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக, விரைவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற வகையில், இந்த முறை கட்சி நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவதாக தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைத்தால், அதை வைத்து கட்சியை மேலும் பலப்படுத்த முடியும் என்பதே அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. ஆலோசனை கூட்டத்தில், இது தொடர்பான கருத்துகளை கட்சி தலைமையிடம் தெரிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Share this story