அரசியல் சதுரங்கம்: இமாச்சலில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்? பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏக்கள்..

By 
ss5

இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும், அங்கு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே, ஆட்சியை இழக்கும் சூழலுக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கட்சியாக மாறியது. 

அதேபோல, 3 சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், இன்று அம்மாநிலத்தில் ராஜ்ய சபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி மாற்றி வாக்களித்தாக சொல்லப்படும் எம்எல்ஏக்களை சிஆர்பிஎஃப் வீரர்களும், ஹரியானா போலீசாரும் சேர்ந்து கடத்தி சென்றுவிட்டதாக இம்மாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டியுள்ளார். மட்டுமல்லாது, மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவின்போது, தேர்தல் அலுவலர்களை பாஜக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். 

இந்நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாஜக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கட்சி மாறி வாக்களித்ததன் மூலம் தங்கள் எம்எல்ஏக்களை விலை பேசியுள்ளதாகவும், இப்படியாக மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த பாஜக முயல்வதாகவும் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது பாஜக வேட்பாளர் மகாஜன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 

இமாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசத்திலும் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். அதாவது, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் 7 எம்எல்ஏக்கள், எஸ்பிஎஸ்பியின் ஒரு எம்எல்ஏ, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து ஒரு எம்எல்ஏ பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். 

இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவின் ராஜ்ய சபா வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this story