அரசியல் ஆட்டம்: காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: தேர்தல் செயல்பாடுகளுக்கு பாதிப்பா?

By 
vho

தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன் ரூ.210 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டிருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாக்கன், ‘‘காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸின் கணக்கு முடக்கம் மட்டுமல்ல, ஜனநாயகத்தை முடக்குவதற்குச் சமம். தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியின் கணக்கை முடக்கி, நாட்டில் ஒற்றைக் கட்சி ஆட்சி அமைக்க திட்டமா?

வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதற்கு எதிராக, வருமான வரித் துறை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது செலவு செய்யவோ, பில்களை செட்டில் செய்யவோ, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ நிதி இல்லை. ‘நியாய யாத்திரை’க்குச் செலவு செய்யக் கூட காசில்லை. அனைத்து அரசியல் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, “நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான தேசிய காங்கிரஸின் கணக்குகளை அதிகாரமிக்க மோடி அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல். பாஜக வசூலிக்கும், அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் கட்சிக்காக கஷ்டப்பட்டு திரட்டப்பட்ட எங்கள் நிதிக்கு சீல் வைக்கப்படும். இதனால்தான், எதிர்காலத்தில் தேர்தலே வராது என கூறுகிறோம்.

இந்த நாட்டில் கட்சி அமைப்பு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதித் துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம். இந்த எதேச்சதிகாரத்துக்கு எதிராக களத்தில் இறங்கி கடுமையாக போராடுவோம்” என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘‘சமநிலையை உறுதி செய்ய, ‘தேர்தல் பத்திரங்களை சட்டவிரோதம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில் ​​​, இப்போது ஒரு புதிய வழியை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. பாஜகவினரின் சட்டவிரோத தேர்தல் பத்திரம் வாயிலாகக் கிடைத்த ரூ.6,500 கோடி பத்திரமாக உள்ளது. 

ஆனால், சாதாரண காங்கிரஸின் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நன்கொடைகள் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விடாமல் செய்து பலவீனமானப்படுத்த பாஜக முயற்சிக்கிறது” எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பயப்பட வேண்டாம். காங்கிரஸ் என்பது பணப் பலத்தின் பெயர் அல்ல... மக்கள் பலத்தின் பெயர். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலைவணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க காங்கிரஸ் போராடும்” என விமர்சித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “காங்கிரஸ் வருமான வரி செலுத்தாமல் இருந்ததால், சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தால், வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என சொல்லிவிட முடியாது. 

தேர்தல் பத்திரம் வாயிலாக எதிர்க்கட்சிகளும் தான் லாபம் அடைந்துள்ளது. எனவே, தேர்தல் பத்திரத்தையும், வங்கி முடக்கத்தை இணைத்து பேசுவது சரியான வாதமல்ல” என்றார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக மீது விமர்சனத்தை முன்வைக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

Share this story