அரசியல் ஆடுகளம்: பாஜக கூட்டணியில் பாமக - உறுதியாகிறது..  

By 
pmk8

வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், 10 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அரசியல் அரங்கில் பாமக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்ற விவாதம் வலுத்து வந்தது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்று காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியை அறிவித்துவிட்டனர். சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சென்னையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் “இந்த தேர்தல் பா.ம.க-வுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் முக்கியமானது. 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்” என பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், “எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது” என்று அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் அன்புமணி, ராமதாஸ் ஆகியோரை அதிமுக, பாஜக இரண்டாம் கட்டத் தலைவர்கள் சந்தித்து பேசிவருகிறார்கள் என்று ஊடகங்களில் வெளியானது. பாமக தரப்பில் என்னதான் நடக்கிறது என்று கேட்டபோது, “நேற்று சென்னை, கிரின்வேஸ் சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பாமக எம் எல் ஏ அருள் சந்தித்து பேசினார். அப்போது அவரின் மொபைல் மூலம் வீடியோ காலில் அன்புமணி மற்றும் ராமதாஸ் பேசினார்கள்” என்று கூறப்படுகிறது.

 இதனை தொடர்ந்து பாஜக தரப்பில்,  விகே சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற ஜூம் மீட்டில் அன்புமணியும், ராமதாஸிம் பேசி, கூட்டணியை உறுதி செய்ததாகவும், 10 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக பாஜக உறுதி அளித்துள்ளதாகவும், இதனை ராமதாஸும், அன்புமணியும் ஏற்றுக்கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி , கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் இந்தக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களவைத்தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், இம்முடிவு கட்சியின் எதிர்கால நலனுக்கு உகந்தது என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். பிரதமரை கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கக்கூடும். வேட்பாளர் பட்டியலை இரண்டொரு நாளில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.

Share this story