தி.மு.க.வின் ஃபியூஸை மின்துறையே பிடுங்கி விடும் : மருது அழகுராஜ்

By 
elec11

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

* அன்று கருணாநிதி கைப்பற்றிக் கொண்ட  தி.மு.க. செயற்குழுவில், புரட்சித்தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவர் மக்கள் மன்றத்தில் நீதி கேட்டார். அதன் மூலம்  அண்ணா தி.மு.க. என்கிற தொண்டர்கள் இயக்கம் பிறந்தது.  

அதுபோலவே இன்று கூவத்தூர் குத்தகைதாரர் எடப்பாடி அபகரித்துக்கொண்ட பொதுக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதிக்காக, அன்று புரட்சித்தலைவர் போலவே அம்மா காட்டிய அடையாளமாம் ஓ.பி.எஸ்.ஸும் மக்களிடமும், தொண்டர்களிடமும் நீதிகேட்கும் புரட்சிப் பயணத்தை காஞ்சி மாநகரத்திலிருந்து செப்டம்பர் மூன்றில் தொடங்குகிறார் என்றால்..
 
மக்கள் திலகத்திற்கு அன்று தொண்டர்களும், மக்களும் தந்த அந் நாளைய பேராதரவை நிச்சயம் ஒப்பில்லா தாய் தந்த தப்பில்லா தங்க மகனுக்கும் நிச்சயம் தருவார்கள்.
 
இடையில் வருகிற காயப்படுத்தும் தீர்ப்புகள், ஒரு படைவீரனுக்கு பதக்கங்கங்களாக மாறும் காயங்கள் மட்டுமே...

இது நம்மை உறுதிபடுத்தும். நமக்கு உத்வேகம் கூட்டும். ஊக்கத்தை பெருக்கும்.. 

மலை சரிந்து விழுந்தாலும் நிலையிழந்து விடாத  பெரியகுளத்து பெரிய மனத்தாரின் எரிமலைப் பொறுமை ஈரிலை இயக்கத்தை மீட்டெடுத்து தொண்டர்களின் உரிமையை தொண்டர்களிடமே சேர்க்கும். இது சத்தியம்.

* மின்சார வாரியமா இல்லை கந்துவட்டிக் கும்பலா.? இதுதான் தமிழக மக்களிடம் தற்போது கொதித்து எழும் கேள்வி.

ஆம்.. வழக்கமாக ஒவ்வொரு முறையும் கட்டுகிற வீடுகளுக்கான மின்கட்டணம் வரைமுறை அற்ற வகையில் வசூலிக்கப்படுவதாக மக்களிடையே எழுந்து வரும் குமுறல் குற்றச்சாட்டை உண்மை என நானும் வழிமொழிகிறேன்..

இந்த முறை எனது கிராமத்து வீட்டுக்கு வந்திருக்கும் மின்கட்டணம் 18 ஆயிரம். விபரம் கேட்டால் கட்டணம் கட்டப்பட்ட பிறகே விபரம் சொல்லப்படும் என்கிற எகத்தாள பதில் வேறு.

பில் கட்டிய பிறகு அவர்கள் சொன்ன பதில் அதில் பத்தாயிரம் டெபாசிட் என்பதாகும். வீட்டு உரிமைக்காரர்கள் வாடகைக்கு குடிவரும் ஆட்களிடம் முன் பணம் டெபாசிட் கேட்பதுண்டு.

ஆனால், குடிமக்களிடம் இடையில் மின்சார வாரியம் டெபாசிட் வசூலிப்பது அதுவும் மின்கட்டணத்தோடு விபரத்தை சொல்லாமலே வசூலிப்பது கேட்டால் டெபாசிட் என்பது என ஒரு கந்துவட்டிக் கும்பலை போல தமிழக அரசின் மின்துறை நடந்து கொள்கிறது.

தி.மு.க.வை ஏற்கெனவே ஒரு முறை படுகுழியில் தள்ளியது மின்சாரம் தான். இப்போதும் அதே மின்சாரம் தி.மு.க.வை காவு வாங்க அது தன் வேலையை தொடங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

தொடர் மின்வெட்டுகள், குறைவான மின் அழுத்த விநியோகங்கள், அதனால் மிக்சி கிரைண்டர் டிவி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகும் பரிதாபங்கள்.

இவையாவிற்கும் மேலாக வரைமுறை அற்ற வசூல் ராஜாக்களாகி வரும் மின்கட்டண வசூலிப்பு. இதில் டெபாசிட் என்கிற புதுவகை தண்டனை.

விடியல் நிறுவனம் இதனை விரைந்து சரி செய்யாவிட்டால்  தி.மு.க. வின் ஃபியூஸை மின்துறையே பிடுங்கி விடும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story