முதல்வர் வேட்பாளராக களம் இறங்குகிறார் ப்ரியங்கா காந்தி.!
 

Priyanka Gandhi enters the fray as the Chief Ministerial candidate!

உத்தரப் பிரதேசத்தில், தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு, அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. 

ப்ரியங்கா காந்தி என்னும் நான் :

காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியின் தலைமையில், தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன. 

இந்த முறை பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்கலாம் என தெரிகிறது.

இதுபற்றி, கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், பிரயாக்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

'கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும். 

ஆனால், முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதா, வேண்டாமா? என்பது குறித்து அவர் தான் முடிவு செய்வார் .

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். கட்சிக்கு ஏற்கனவே தலைவர் உள்ளார். 

இன்னொரு தலைவர் தேவையில்லை. கட்சி தலைமை குறித்து எங்களுக்கு திருப்தி உள்ளது. வெளியில் உள்ளவர்களுக்கு திருப்தி இல்லை என்பதுபோல் தோன்றுகிறது' என்றார்.

ராகுல் :

இதற்கிடையே, ராகுல் காந்தியை தலைவர் ஆக்குவதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் சமூக ஊடகத் துறை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த வார தொடக்கத்தில், டெல்லி பிரதேச மகிளா காங்கிரசும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

2017-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக 312 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை தேர்தலில், பாஜக 39.67 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளையும், காங்கிரஸ் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Share this story