ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்..

By 
rsb

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் தலைப்பில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற  யாத்திரையின்போது பேசிய அண்ணாமலை,

“நாகா மக்களை இழிவாக பேசியிருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய நாகாலாந்து போலீஸ் வருவதற்கு முன்பு தமிழக போலீஸ் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.” என்றார். பாஜகவினரை தமிழக அரசு கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி போற்றி வருவதாக புகழாரம் சூட்டிய அண்ணாமலை, ஜல்லிக்கட்டு போட்டி காட்டுமிராண்டித்தனம் என விமர்சித்து காங்கிரஸ் தடை விதித்தது. ஆனால் தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடிதான் என்றார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தில் உள்ள ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற வகையிலேயே செயல்படுகிறார். தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்திட மறுத்து வருகிறார். நாகலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அந்த ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள்.

தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. நான் ஒரு உதாரணத்துக்காக கூறுகிறேன். நாகலாந்துக்காரர்கள் நாய்கறி உண்பார்கள். நாய்கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை ஓட ஒட விரட்டியடித்தார்கள் என்றால், உப்பு போட்டு சோறு உண்ணும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்.” என்றார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், “நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்.” என ஆளுநர் ரவி கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதேபோல், “ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்களின் அநாகரீகமான பேச்சுக்களால்தான் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது. ஆனாலும் திமுக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. வடகிழக்கு மாநில சகோதரர், சகோதரிகளை நாய்க் கறி உண்பவர்கள் என கூறி அவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. இந்திய கூட்டணியின் பார்வையில் இதுதான் இந்தியா.” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ஆளுநர் ரவி, “நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Share this story