அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு: ரூ.10 கோடி பறிமுதல்?

By 
velu1

தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவருக்குச் சொந்தமான இடங்கள், நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதானையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், சென்னையில் உள்ள அவரது வீடு, அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் இந்த சோதனை 4ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்த சோதனையில், தமிழக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல்வேறு டிஜிட்டல் தரவுகள், வங்கிப் பணப் பரிமாற்றம், கோப்புகள், தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சோதனையின் முடிவில் அதிகாரப்பூர்வ தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என தெரிகிறது. இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அண்மையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்தது. இதில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அமைச்சர் பொன்முடியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story