ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு

By 
Rs .520 crore Temple Land Recovery Minister cekarpapu

தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

81 ஏக்கர் நிலங்கள் :

அதன்படி, ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம்.

அந்த அடிப்படையில், குற்றாலத்தில் உள்ள ஆதிபராசக்தி பள்ளி மட்டும்தான் தனியார் கட்டிடத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. தற்பொழுது இதுதொடர்பாக ஆணையர், கலெக்டர், இணை ஆணையர், கல்லூரி முதல்வருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் சார்பில் நிதி பெறுவதற்கு முயற்சி செய்வோம். அடுத்த ஆண்டு இப்பள்ளிக்கு தேவையான கட்டிடத்தை அரசுக்கு சொந்தமான இடத்திலேயே செயல்படுத்துவதற்கான முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.520 கோடி ஆகும். இதனை இந்து சமய அறநிலையத்துறை தன்வசப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் :

தற்போது, சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை தன்வசப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், கோவிலில் போதிய பணியாளர்கள், அர்ச்சகர்கள், காவலர்கள், மடப்பள்ளி பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டு பணிடங்களை நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

Share this story