மோடி ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

By 
ksa11

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சந்திரயான்-3 தன் இலக்கை அடைந்து இருக்கிறது. அனைத்து இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். இதற்கு அடித்தளமிட்டு, விண்வெளி ஆராய்ச்சி மையத்தை ஜவகர்லால் நேரு நிறுவினார். அதன் வளர்ச்சியாக, இன்று நாம் நிலவை தொட்டு இருக்கிறோம்.

இலவச மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது. பிரதமர் மோடி தன்னை நேர்மையானவர் என்று சொல்லுகிறார். ஆனால் சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கை குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

அதில், மத்திய அரசு துறைகளில் ரூ.7½ லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. இந்த அறிக்கை பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்ல மறுக்கிறார். பரனூர் சுங்க சாவடியில் மட்டும் 6.5 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

வருகிற 31-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் வாக்குசாவடி உறுப்பினர்கள் பயிற்சி பாசறை நடத்த இருக்கிறோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, 9 இடங்களில் வாக்குசாவடி உறுப்பினர்கள் பயிற்சி பாசறை நடைபெறும்.

காவிரி விவகாரத்தில் நமது உரிமையை தான் கேட்கிறோம். கர்நாடகத்தில் தண்ணீர் திறக்கும் சூழ்நிலை வரும்போது பா.ஜ.க. கட்சி எதிர்க்கிறது. இதை தமிழக பா.ஜ.க. கண்டிக்கவில்லை. ஆக பா.ஜ.க. தமிழகத்திற்கு விரோதமாகவே செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Share this story