உதயநிதியை கண்டித்து, டெல்லியில் சாமியார்கள் போராட்டம்..

By 
dar5

சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகியவற்றுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அவருக்கு எதிராக பாரதிய ஜனதா. இந்து முன்னணியினர் போராட்டமும் நடத்தினார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் இன்று இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.

அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் டெல்லி மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தை அடைந்ததும் அவர்கள் அதன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத் தின் போது அவர்கள் உருவ பொம்மைகளையும் தீ வைத்து எரித்ததால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனால் தமிழ்நாடு இல்லம் முன்பு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்து அமைப்பினரின் இந்த பேரணி-ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பேரணி சென்ற சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Share this story