ஆறு இணைப்புத் திட்டம் : சபாநாயகர் அப்பாவு தகவல்

By 
river

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், இன்று 2-ம் கட்டமாக திருவள்ளுவர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பாளை பெருமாள்புரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மேயர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 1,590 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவி தொகைக்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை வழங்கினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளின் உயர்கல்வி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். அரசு உதவிபெறும் கல்லூரி மாணவிகளுக்கும், உதவித்தொகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் 3-ல் 2 பங்கு அரசு உதவி பெறும் கல்லூரி உள்ளது. நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முதலமைச்சர் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். நிதிநிலைமை ஓரளவு சீரான பின்னர் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

டெல்டா மாவட்டங்களில் சேதமான நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம்தான் வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக தி.மு.க. ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நம்பியாறு-கருமேனியாறு-தாமிரபரணி இணைப்பு திட்டம் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் இத்திட்டம் முடிக்கப்படும் என முதலமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.

களக்காட்டில் பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்துள்ளது. அதனை கலெக்டருடன் சென்று நான் பார்வையிட்டுள்ளேன். சமீபத்தில் நெல்லை வந்த வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். சேதமான வாழைகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story