அதிமுக.வில் எஸ்.பி. வேலுமணி போட்ட பதிவுக்கு, பெரும்பாலான சீனியர்கள் கனத்த மவுனம்.. 

By 
spv4

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 'என்றென்றும் அதிமுககாரன்' என போட்ட ஒற்றை ட்வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். பெரும்பாலான சீனியர்கள் கனத்த மவுனத்துடன் இருந்து வருகின்றனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனான மோதலைத் தொடர்ந்து கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்தது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகியது. இந்த விலகல் சில நாட்களிலேயே முடிவுக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் அதிமுக தரப்போ, 2024 லோக்சபா தேர்தலில் மட்டும் அல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறாது; அதிமுக தலைமையில் தனி கூட்டணிதான் அமைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் திடீரென அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்பி வேலுமணி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், #என்றென்றும்_அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக்குடன் அதிமுக கொடி கட்டிய சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்கிற ஒரு படத்தைப் பதிவிட்டது பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.

அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் இதனை வழிமொழிந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான அதிமுக தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர். 

Share this story