நயினார் நாகேந்திரனை கலாய்த்த சபாநாயகர்; சட்டபேரவையில் ருசிகரம்..

By 
bly3

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி பேசக் கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். 

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த தனித்தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது தனித்தீர்மானம் மீது மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும். நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். குடியரசு தலைவர், நீதிமன்றங்கள், ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது என்றார். 

இந்த தீர்மானத்தின் மீது பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த இந்த அவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சிறுபிள்ளைத்தனமானது எனக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், எங்களது தென்பகுதியில் சிறுபிள்ளைத்தனம் என்பது தவறான வார்த்தை என கூறினார். 

மேலும், ஆளுநர் பற்றி பேசக் கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு குறுக்கீட்டு, ஆளுநர்களின் செயல்பாட்டைத்தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளுநர்கள் மாறுவார்கள், நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம் என்று கூறினார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Share this story