62 பேரின்  ஆவிகள் மு.க.ஸ்டாலினை சும்மா விடாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

By 
60d

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாகக் கூறி திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில்  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.  அப்போது பேசிய அவர்,

திமுக அரசு பொது ஏற்றது முதல் கள்ள சாராய மரணங்கள், போதை வஸ்துகள் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரத்தில் கள்ள சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில், பலர் கண் பார்வை இழந்துள்ளனர். கடந்த முறை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட பொழுது இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என முதலமைச்சர் வாய்சவடால் விட்டார். ஆனால் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மருத்துவத்துறையின் அலட்சியத்தால் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் மருந்து இல்லை என கூறிய பிறகு தான் மும்பைக்கு சென்று மருந்துகளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். மடியில் கனமில்லை என்றால் விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றலாமே? ஆனால் சிபிஐ க்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலர் மாட்டுவார்கள் என தெரிவித்தார். 

தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் வெறும் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது  மக்கள் பிரச்சனையை சட்டசபையில்தான் விவாதிக்க முடியும். 60க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் இதைப் பற்றி விவாதிக்க சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் குரவளையை பிடிக்கும் வகையில் தான் சட்டமன்றம் உள்ளது என குற்றம்சாட்டினார்.

மருந்து இல்லை என பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா.? 62 பேரின்  ஆவிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சும்மா விடாது என கூறினார். 

Share this story